Monday, June 13, 2011

கடன்.. ஒரு விழிப்புணர்வு பார்வை!


 கடன் வாங்காமல் இப்போதுள்ள சூழ்நிலையில் வாழ்க்கையை நகர்த்துதல் என்பது குதிரைக் கொம்பான விசயம்தான். காலமும், சூழலும், விலைவாசி ஏற்றமும் சேர்ந்து மனிதர்களை ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கியிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கடன் வாங்கும் போதே அதை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமும் மனிதர்களுக்கு இருக்குமெனில் சூழ்நிலைகளை சிக்கலின்றி சமாளித்தல் மிகவும் எளிது.

கடன் வாங்குதல், மற்றும் கொடுத்தல் பற்றிய நிறைய விழிப்புணர்வு கட்டுரைகளை நாம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் முதல் படியாக இந்த கட்டுரையை உங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.






தன் தகுதிக்கு மீறிய… அதே சமயத்தில், அத்தியாவசியத் தேவையன்றி, அதிக வட்டிக்கு, அவசரத்திற்குப் பணம் வாங்குதல், ஆபத்தையே விளைவிக்கும் என்பதற்கு, அன்றாட தினசரிகளில் வரும், ”கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை” போன்ற செய்திகளே போதும் இதனை விளக்குவதற்கு. பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்தே வருகிறார்கள் இந்த மாதிரியான கடன் கொடுக்கும் மைக்ரோஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிகள். இவர்கள் குறிவைத்து செயல்படும் நபர்கள் பெரும்பாலும் சிறுவியாபாரிகளும், கிரமங்களில் இயங்கும் ஒரு சில மகளிர் குழுக்களும், ஆட்டோ டிரைவர்கள் போன்ற எளிய மக்களே…

இவர்கள் கடன் கொடுக்கும் விதமும் அதை வசூலிக்கும் முறையும் மிகவும் கறாராக இருக்கும். ஆனால், அதே சமயத்தில் கடன் கொடுப்பதற்கு முன்பு, இந்த கம்பெனிகளின் கீழ் வேலை பார்க்கும் ஃபீல்ட் ஆஃபிஸர்கள் எனப்படும் இந்த நபர்கள், நம்மவர்களை அணுகும் முறையே வித்தியாசமாக இருக்கும். மிகவும் அன்பாகவும், நம்மவர்களின் வாழ்கை சிறப்பதற்கே இவர்கள் அவதாரம் எடுத்தவர்கள் போன்றும்  பேசி மயக்குவார்கள்.

பெரும்பாலும் இவர்களின் டார்கெட்டாய் இருப்பது, வட்டி விகிதத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்களும், எவ்வளவு கட்ட வேண்டும் என சரிவர கணக்கிடத் தெரியாதவர்களும், வங்கிக் கணக்கு முறைகள் பற்றி அதிகம் தெரியாதவர்களுமாகவே இருப்பர்.

சரி, இப்பொழுது இவர்கள் கடன் வழங்கும் முறையைப் பார்ப்போம். கடன் கொடுக்கும் போதே 10 முதல் 20 சதவிகிதம் வரை பிடித்துக் கொள்வார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் processing fees, insurance, field officers commission  என்று பல்வேறு காரணங்களைக் கூறி, அதற்கும் ஒரு கணிசமான தொகையைப் பிடித்துக் கொள்வார்கள். இவ்வளவோடு விடுவார்களா, என பார்த்தால் இல்லை, கடன் கேட்கும் நபர் இதுவரை வங்கிக் கணக்கு வைத்திருக்கவில்லையெனில், இவர்கள் கை காட்டும் வங்கியில் புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அதோடு 12/24 வெற்றுக் காசோலைகளிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்.

மாதமாதம் வந்து கறாராக கடனை வசூலித்து விட்டு செல்வார்கள். ஒருவேளை கடன் வாங்கிய நபர் கொடுக்கத் தவறும் பட்சத்தில், அவர்கள் ஏற்கனவே வசூலித்த அந்த வெற்றுக் காசோலைகளை, இவர்கள் கட்ட வேண்டிய அந்த குறிப்பிட்ட தொகையை நிரப்பி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி விடுவார்கள். அங்கேயும் எப்படி நம்மவர்களின் கணக்கில் பணம் இருக்கும்?. இருந்தால் தான் இவர்கள் கேட்கும் போதே கட்டியிருக்கலாமே… ஸோ, அந்த கம்பெனி இவர்கள் பேரில் வாங்கிக் கொண்ட காசோலையும் பவுன்ஸ் ஆகிவிடுவதோடு மட்டுமில்லாமல், அபராதத் தொகையோடு நம் வீடு நோக்கித் திரும்பி வரும். சமயத்தில் இந்த வகையில் கடன் கொடுக்கும் முதலாளிகளுக்கு அடியாட்களும் இருப்பர். எனவே இவர்களைப் பற்றி வெளியே எங்கும் போய் சொல்ல முடியாது. வெற்றுக் காசோலை மிரட்டலும், அடியாட்கள் மிரட்டலும் சேர்ந்து கடன் வாங்கியவரின் கழுத்தை நெறித்து விடும்.

எனவே எனதருமை மக்களே, இதைப் போன்ற நபர்களிடம் கடன் வாங்குவதற்கு முன்பாக சிந்தியுங்கள் இது அத்தியாவசியம் தானா என்று. அவசரத்திற்காக என்று கடன் வாங்கி விட்டு பெரும் அவதிக்கு உள்ளாகாதீர்கள்.

இதற்காக தகுந்த ஆலோசகர்களையும், அதிகாரிகளையும் அணுகிக் கேட்ட போது, அவர்களின் மீது புகார் மனு ஒன்றை எழுதிக் கொடுங்கள், தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், பெரும்பாலும் இத்தகையவர்களிடம் சென்று கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

முறைகேடு செய்பவர்களைப் பற்றி வெளிச்சம் காட்டி சொல்லும் அதே வேளையில், மக்களே… ”சேமிப்பு” என்னும் வார்த்தையைத் தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். அது 10 ரூபாயாகவே இருப்பினும், சேமிக்க வேண்டும் என்ற ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள், என்பதையும் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். இதனோடு சரியான திட்டமிடுதலும் அவசியமாகிறது.

நம் முன்னோர்கள், நாம் சிறுபிள்ளையாய் இருக்கும் போது, ஒரு சிறிய உண்டியல் ஒன்றை வாங்கிக் கொடுத்து சேமிக்க கற்றுக் கொடுப்பார்கள். அதில் உள்ளது சூட்சுமம். ஏன் பெரியவர்களாய் ஆனதும் நாம் சேமிப்பை மறந்து விடுகிறோம்? குறைந்த வருமானமே உடையவராயினும், ஆரம்பத்திலிருந்தே சிறிது அளவேனும் சேமிக்க வேண்டும். சிறுதுளி பெரு வெள்ளமென அந்த தொகை ஒரு நாள் உங்களுக்கு உதவிடும். அதிக கடன் இன்றி, வாழும் நிம்மதியே சிறந்த  செல்வம். சேமிப்பு என்பதும் ஒருவகையான ஒழுக்கமே. நாம் நம் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம் அவர்களுக்கு கடன் சுமையைக் கொடுக்காதவாறு பார்த்துக் கொள்வோம். சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அநாவசியமாய், அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கதை ஒழித்து, கடனின்றி மன சாந்தியுடன் வாழ்வோம்.

Post Comment

No comments:

Post a Comment